முன்னாள் அமைச்சரின் ஹோலி கொண்டாட்டத்தின்போது நடனம் ஆடிய போலீஸ் பணியிட மாற்றம்
- காவலரை நடனமாடுமாறு முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
- நடனம் ஆட காவலர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்ச் 14 அன்று இந்தியாவில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக பீகாரில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது.
பீகாரில் முன்னாள் அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் தனது வீட்டில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவலரை நடனமாடுமாறு தேஜ் பிரதாப் வற்புறுத்தியுள்ளார்.
நடனம் ஆட காவலர் மறுக்கவே, நடனம் ஆடுகிறாயா? இல்லை உன்னை சஸ்பெண்ட் செய்யவா? என அமைச்சர் மிரட்ட, வேறு வழியில்லாமல் காவலர் நடனம் ஆடியுள்ளார்.
அமைச்சரின் வற்புறுத்தலால் காவலர் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சீருடையில் நடனமாடிய காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வேறொரு காவலர் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.