இந்தியா

50 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ரூ.2½ கோடி மோசடி- பெங்களூருவில் பதுங்கிய ஆந்திர வாலிபர் கைது

Published On 2025-03-16 13:06 IST   |   Update On 2025-03-16 13:06:00 IST
  • தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார்.
  • ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை.

ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 33). இவர் பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஐதராபாத் வந்தார்.

ஐதராபாத்தில் உள்ள வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளைஞர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக போலீசார் வம்சி கிருஷ்ணாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

ஜெயிலில் இருந்து வெளியே வந்த வம்சி கிருஷ்ணா ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. போட்டோவை தனது வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்தார்.

பின்னர் திருமண தகவல் வலைதளங்களில் தன்னுடைய தாய் அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்கிறார். நான் உள்ளூரில் வியாபாரம் செய்து வருகிறேன். 2-வது திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பதிவு செய்தார்.

மேலும் தனது தாய் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதனை உண்மை என நம்பி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வம்சி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர்.

பழக்கம் ஏற்பட்ட பெண்களிடம் தனது நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர். தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார். இதன் மூலம் ரூ.2½ கோடி மோசடி செய்தார்.

வம்சி கிருஷ்ணாவிடம் பணத்தை இழந்த பெண்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.

ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

பல்வேறு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News