VIDEO: பஞ்சாபில் இந்து கோவில் மீது குண்டு வீச்சு.. பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு?
- குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
- கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது நேற்று முன் தினம் இரவு சுமார் 12:35 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 கையெறி குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக, இந்த கையெறி குண்டு வெடித்தபோது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லை.
அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியும் நூலிழையில் காயங்களின்றி உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. தாக்குதலின்போது அந்த மர்ம நபர்களின் ஒரு கையில் மத கொடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு கோவிலை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.
முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் தொடர்பு இருப்பதாக காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்களை ஐ.எஸ்.ஐ மூளைச்சலவை செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது என்று அவர் கூறினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன என்று தெரிவித்தார்.