இந்தியா

முன்பதிவு செய்தும் பலன் இல்லை: கவனிக்க தவறிய ரெயில்வே- ரூ.30 ஆயிரம் வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2025-03-16 10:51 IST   |   Update On 2025-03-16 10:51:00 IST
  • பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு.
  • அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை.

திருவனந்தபுரம்:

கர்நாடக மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் ஜெம்ஷீத். தொழில்நுட்ப வல்லுனரான இவர், கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே உள்ள திருரூருக்கு செல்ல யஷவந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தட்கல் முறையில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுள்ளார்.

பயணநாளில் பெங்களூரூ ரெயில் நிலையம் வந்த அவர் தான் செல்ல வேண்டிய ரெயிலில் இரவு ஏறி, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்ற போது அங்கு முன்பதிவு செய்யாத 5 பயணிகள் இருப்பதை பார்த்துள்ளார். அவர்களிடம் இது தனது இருக்கை என்று ஜெம்ஷீத் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் நகரவில்லை.

இதனை தொடர்ந்து 10 மணி நேர பயணத்தை ஜெம்ஷீத் இரவில் நின்று கொண்டே சென்றுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.4 லட்சம் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு பல மாதங்கள் நடைபெற்ற நிலையில், ஜெம்ஷீத்துக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி ஜெம்ஷீத் கூறும் போது, நான் பாதிக்கப்பட்ட போது ரெயில்வே போலீசாரிடம், தெரிவித்தேன். அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.

அவரிடம் கூறியும் பலன் கிடைக்காததால் ரெயில்வே உதவி எண் 139-க்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அது பயனற்றதாக இருந்தது. ரெயில்வே செயலியும் கை கொடுக்காததால் திருரூரை அடைந்ததும் ரெயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தேன்.

ஐ.ஆர்.சி.டி.சியின் பாலக்காடு மற்றும் பெங்களூரூ ரெயில்வே பிரிவுகளுக்கு புகார் கொடுத்தும் பலன் கிடைக்காததால் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் என ஜெம்ஷீத் தெரிவித்தார்.

பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்கும், டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட படுக்கைகளை வழங்குவதற்கும் இந்திய ரெயில்வே தான் பொறுப்பு என்று நுகர்வோர் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

ரெயில் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே துறையை பொறுப்பேற்க வைக்க வேண்டும். ரெயில்களில் கொசுக்கள் கடித்தால் கூட ரெயில்வே நிர்வாகம் மீது நாம் வழக்கு தொடர முடியும் என்றும் ஜெம்ஷீத் கூறியுள்ளார்.

தற்போது இந்த வழக்கில் ரெயில்வேக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை. எனவே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News