மொழியை திணிப்பதும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல - பவன் கல்யாண்
- ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை.
- மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக பேசிய அவர், "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?" என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மொழி விவகாரம் குறித்து பேசிய கருத்துக்களுக்கு பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஒரு மொழியை திணிப்பதும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும்—இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல.
நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.
NEP 2020-ன் படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவை ஹிந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை) மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் ஹிந்தியை படிக்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மிரி, ஓடியா, வங்காள மொழி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோகரி, கொங்கணி, மைதிலி, மணிப்பூரி மொழி, நேபாளி, சந்தாலி, உருது உள்ளிட்ட எந்த இந்திய மொழிகளையும் தேர்வு செய்யலாம்.
பன்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வையும், கல்விச் சுதந்தரத்தையும் வழங்குகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் மொழிப் பன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது, அல்லது பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனத் தவறாக கூறுவது—மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது.
ஜன சேனா கட்சி மொழித் தேர்வுச் சுதந்திரமும், கல்விச் சுதந்தரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் உறுதியாக உள்ளது," என குறிப்பிட்டுள்ளார்.