ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு
- ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு.
- இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவற்றின் இசைக்குழுக்கள் ரசிக்கத்தக்க 30 இந்திய பாடல்களை இசைத்தன.
76 வது குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு இன்று டெல்லி விஜய் சதுக்கத்தில் நடைபெற உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "ரைசினா மலைகள் மீது சூரியன் மறையும் கம்பீரமான பின்னணியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விஜய் சதுக்கத்தில் 2025 ஜனவரி 29 அன்று 76 வது குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் படைகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வு நடைபெற உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய மந்திரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சிறப்பு பார்வையாளர்கள் முன்னிலையில் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை, மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றின் இசைக்குழுக்கள் ரசிக்கத்தக்க 30 இந்திய பாடல்களை இசைக்கவுள்ளன. மெல்லிசை நிகழ்வில் கதம் கதம் பதாயே ஜா என்ற பாடலிசையுடன் தொடங்கி 'சாரே ஜஹான் சே அச்சா' என்ற பிரபலமான பாடலுடன் இந்த நிகழ்வு நிறைவடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மாலை ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் பாசறை திரும்பும் மெல்லிசை நிகழ்வின்போது இந்திய ஜனாதிபதி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.