திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கும் பறவைகள்- பேரழிவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை
- சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன.
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களை கேரள மாநிலத்தினர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரக்கூடிய விமானங்களின் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கடி நடப்பதால் விமான பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் பறவைகள் மோதியதால் பழுதான இண்டிகோ விமானம், பெங்களூருவுக்கு 13 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடந்த மாதம் மட்டும் 5 விமானங்களின் மீது பறவைகள் மோதிய சம்பவம் நடந்துள்ளது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடு பாதையின் மீது பறவை கூட்டம் வட்டமிட்டபடியே இருப்பதால் அடிக்கடி இந்த சம்பவம் நடக்கிறது.
நாட்டின் பெரும்பாலான விமான நிலையங்களில் பறவைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும், திருனந்தபுரம் விமான நிலையத்திற்கு அருகில் பறவைகளின் அடர்த்தி வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாக விமானிகள் கூறுகின்றனர். பறவைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் அது மிகப்பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்று விமான நிலைய ஆணையம் பல முறை எச்சரித்துள்ளது.
பறவைகள் விமானங்களின் மீது மோதுவதை தடுக்க பறவைகளை துரத்துபவர்களை விமானநிலையம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துகிறது. அவர்கள் விமானம் வரும் போது பறவைகளை பயமுறுத்துவதற்கு உரத்த ஒலிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த ஒலிகளுக்கு பறவைகள் பழகிவிட்டதால் அவை அஞ்சுவதில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பறவைகள் அதிகளவில் வருவதற்கு காரணம் திருவனந்தபுரம் விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் குப்பை குவியல் இருப்பதே காரணம் என்றும், அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் அரசுக்கு ஏறுகனவே கடிதம் அனுப்பியிருக்கின்றனர்.
விமான நிலைய சுற்றுச்சுவர்களுக்கு அருகில் திறந்தவெளிகள் மற்றும் அதன் அருகில் செயல்படும் இறைச்சி கடை கழிவுகள் கொட்டப்படும் கிடங்குகள் ஆகியவையே பறவைகள் இந்த பகுதிக்கு அதிகமாக வருவதற்கு காரணமாக இருக்கின்றன.
கழுகு, காகம், கொக்கு, புறா, ஆந்தை உள்ளிட்ட பறவைகள் இறைச்சி கழிவுகளை உண்பதற்காக விமான நிலைய பகுதிக்கு வருகின்றன. இவ்வாறு பறவைகள் அதிகளவில் வருவது விமானங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்குகிறது.
விமான போக்குவரத்து விதிமுறைகளின் படி ஒவ்வொரு பத்தாயிரம் விமானங்களுக்கும் ஒரு பறவை மோதல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 10 பறவை மோதல் சம்பவங்கள்நடக்கின்றன.
இது பல நிலை விசாரணையை தூண்டுவதால், அதனை தவிர்க்க விமானிகள் பெரும்பாலும் பறவை மோதல்களை அதிகாரபூர்வமாக புகாரளிக்க முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விமானத்தின் மீது பறவை மோதல் என்பது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
மேலும் இதன் காரணமாக விபத்து எதுவும் நடந்தால் பேரழிவுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் குழு கூட்டத்தில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பறவைகள் மோதினால் விமானத்தின் இயந்திரம் செயலிழந்து தீவிபத்து ஏற்படலாம்.
மேலும் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகளை சேதப்படுத்தும் என்பதால் விமானம் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். பறவைகள் மோதுவது பயணிகளுக்கு மட்டுமல்ல விமான நிலையத்திற்கு அருகில் வசிக்கும் மக்களுக்கும் ஆபத்தானது. ஆகவே இந்த பிரச்சனையை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், அந்த கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.