இந்தியா

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்- என்.ஐ.ஏ.வுக்கு தலிபான் பெயரில் இ-மெயில்

Published On 2023-02-03 07:32 GMT   |   Update On 2023-02-03 07:32 GMT
  • மிரட்டல் கடிதம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
  • நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

மும்பை:

மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) இ-மெயில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

இக்கடிதத்தை அனுப்பிய நபர், தான் தலிபான் என்றும் தலிபான் அமைப்பின் முக்கிய தலைவரான சிராஜூதீன் ஹக்கானியின் உத்தரவின் பேரில் மும்பையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த போவதாகவும் குறிப்பிட்டு இருந்தது.

மிரட்டல் கடிதம் குறித்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள், மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மும்பை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் தீவிர சோதனையில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

மும்பைக்கு தீவிரவாத மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உஷார் படுத்தப்பட்டன. நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் கேட்டு கொள்ளப்பட்டனர்.

இதையடுத்து முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் மும்பை போலீசாரும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவை நடந்து உள்ளன. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் தான் மும்பைக்கு தலிபான்கள் பெயரில் மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News