பட்ஜெட் 2025: தற்போதைய வருமான வரி சிலாப் என்ன.. இதில் மாற்றங்கள் வருமா?
- புதிய வரி முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
- பழைய வரி முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1-ம் தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும்.
மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிதிப்பில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வருமான வரியில் பழைய முறை மற்றும் புதிய முறையை என்ற 2 முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இரண்டில் எது வேண்டுமானாலும் வருமான வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
புதிய வரி முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. ஆனால் ரூ.3-7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி செலுத்த வேண்டும். அதேசமயம், பிரிவு 87A இன் கீழ் ரூ. 7 லட்சம் வரை வரி தள்ளுபடி பெறலாம்.
அதே சமயம் ரூ.7-10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும் ரூ.10-12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் ரூ.12-15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.15 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படுகிறது.
அதே சமயம் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. அதேசமயம் ரூ.2.5-5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும் ரூ.5-10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும் ரூ.10 லட்சத்திற்கும் மேலான வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படுகிறது. ஆனால் பழைய வரி முறையின் கீழ் வருமான வரி விளக்கு பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில், 2025 பட்ஜெட்டில் பழைய வரி முறையை முழுவதுமாக நீக்கப்படலாம் என்றும் புதிய வரிமுறையின் கீழ் வரி அடுக்குகளில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் என்பதற்கு பதிலாக 4-5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்திற்குப் புதிதாக 25% வரி விகிதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.