கெஜ்ரிவால் ஜி... எப்போது யமுனையில் நீராடுவீர்கள்?- ராகுல் காந்தி கேள்வி
- யமுனை நதி குப்பை, அழுக்கு, கழிவு நீரால் நிரம்பியுள்ளது.
- யமுனாவை சுத்தம் செய்வோம். நான் யமுனையில் குளிப்பேன், இல்லையென்றால் வாக்களிக்க வேண்டாம் என்றார் கெஜ்ரிவால்.
டெல்லி சட்மன்ற தேர்தல் பிரசாரத்தில் யமுனை நிதி முக்கியமானதாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், டெல்லிக்கு குடிநீர் வழங்கும் யமுனை நதி நீரில் பாஜக-வின் ஹரியானா அரசு விஷத்தை கலந்ததாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியதுதான்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹரியானா மாநில அரசு வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளது. பிரதமராகிய நான் குடிக்கும் நீரில் பாஜக அரசு விஷம் கலக்குமா? என பிரதமர் மோடி கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் ஆணையமும் கெஜ்ரிவாலுக்கு விளக்கம் அளிக்கக்கோரி சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி கெஜ்ரிவால் நோக்கி, யமுனை நதியின் அவலம் குறித்து கேள்வி ஏழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
நீங்களும் என்னைப் போல டெல்லிவாசியாக இருந்தால், யமுனாவின் நிலையைப் பார்த்து மிகவும் வருத்தப்படுவீர்கள். நேற்று காலை யமுனை நதியின் கரையோரம் சென்றேன். அங்கு ஆற்றங்கரையோரம் குடியிருப்பவர்கள், படகு ஓட்டுபவர்கள், செயல்பாட்டாளர்களுடன் யமுனை நிதி எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆலோசனை நடத்தினேன்.
யமுனை நதி குப்பை, அழுக்கு, கழிவு நீரால் நிரம்பியுள்ளது. இதன் அர்த்தம் நதியாகவே இல்லை என்பதுதான். ஆராய்ச்சிகளின் கருத்தின்படி, நதி நீர் சுத்திகரிப்பதற்காக எடுக்கப்பட்டு, அதன்பின் கழிவு நீர் மீண்டும் அங்கேயே விடப்படுகிறது.
ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கெஜ்ரிவால் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறார். யமுனாவை சுத்தம் செய்வோம். நான் யமுனையில் குளிப்பேன், இல்லையென்றால் வாக்களிக்க வேண்டாம். இப்படி பல நீண்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார்.
இன்று மீண்டும் யாமுனை நீர் பாட்டில் உடன் உட்கார்ந்து கொண்டு குற்றச்சாட்டை முன்வைக்கிறார். எதிர்குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கிறார்.
இது யமுனையை இழிவு செய்வதது மட்டுமல்ல. டெல்லியில் வாழும் மக்களை கேலி செய்வதாகும். மோடி மற்றும் கெஜ்ரிவால் அரசாங்கங்களின் அலட்சியம் மற்றும் ஊழலின் சங்கமத்தின் விளைவாகவே யமுனையின் இந்த கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எக்ஸ் பக்க பதிவில் "கெஜ்ரிவால் ஜி, தற்போது 2025 பிறந்துள்ளது. எப்போது யமுனையில் நீராடுவீர்கள்?. டெல்லி காத்துக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.