இடைத்தேர்தல் வன்முறை: சப் கலெக்டரை அறைந்த சுயேட்சை வேட்பாளர் கைது - ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
- முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நாரேஷ் மீனா சுயேட்சையாக நின்றார்.
- அவரை கைது செய்ய விடாமல் தடுத்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியாவில் 10 மாநிலங்களில் உள்ள 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கேரளாவின் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று [நவம்பர் 13] இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றன. அந்த வகையில் ராஜஸ்தானில் உள்ள 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில் டோங்க் மாவட்டம் தியோலி - யூனியாரா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சப் கலெக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொகுதியில் சுயேட்சையாக நின்ற முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் நாரேஷ் மீனா சாம்ராவதாவில் உள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சப் கலெக்டர் அமித் சவுத்ரி தனது ஆட்கள் 3 பேரை அழைத்துவந்து கள்ள ஒட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி அவரது அவரது கன்னத்தில் அறைந்து சரமாரியாகத் தாக்கினார். இதனைத்தொடர்ந்து போலீசார் மீனாவை அங்கிருந்து அகலச் செய்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நேற்று இரவு நரேஷ் மீனாவை போலீசார் கைது செய்ய வந்தனர். ஆனால் அவரை கைது செய்ய விடாமல் தடுத்து அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், வேட்பாளரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேட்பாளரின் ஆதரவாளர்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதுடன், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
பின்னர் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேட்பாளர் நரேஷ் மீனா இன்று கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், கிராமத்திற்கு வெளியே உள்ள நெடுஞ்சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையின் மத்தியில் விறகு கட்டைகளை அடுக்கி தீ வைத்தனர். இந்த வன்முறை தொடர்பாக சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அப்பகுதி போர்க்களமாக காட்சியளிக்கிறது..