ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கையால் டெல்லி அரசுக்கு ரூ.2000 கோடி இழப்பு - சி.ஏ.ஜி. அறிக்கை
- டெல்லியில் 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.
- மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த போது 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி துணை நிலை கவர்னர் அதை ரத்து செய்தார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.
இந்நிலையில் டெல்லியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை டெல்லி சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பாஜக முதல்வர் ரேகா குப்தா இதை தாக்கல் செய்தார். சி.ஏ.ஜி. அறிக்கையில் மதுபான கொள்கையால் ரூ.2000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஆம் ஆத்மி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறும் போது, 2017-2018க்கு பிறகு சி.ஏ.ஜி. அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. முந்தைய ஆம் ஆத்மி அரசு அரசியல் அமைப்பை மீறியுள்ளது என்று தெரிவித்தார்.