பெங்களூரு: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி.. நீதி வாங்கி தருவதாக மீண்டும் சீரழித்த போலீஸ்!
- சிறுமிக்கு நீதி வழங்குவதாகவும், அவளுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
- வெளியே சொன்னால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கிவிடுவேன் என்றும் கான்ஸ்டபிள் சிறுமியை மிரட்டியுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி நீதி கேட்டு காவல் நிலையத்திற்கு வந்த இடத்தில் போலீசும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பொம்மனஹள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த விக்கி என்ற திருமணமான நபர் கடந்த வருடம் மே மாதம் முதல் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக மயக்கி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தாய் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் காவலர் அருண் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், கான்ஸ்டபிள் அருண், சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து, போதைப்பொருள் கலந்த மதுவை குடிக்க வைத்தார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், இதைப்பற்றி வெளியே சொன்னால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கிவிடுவேன் என்றும் கான்ஸ்டபிள் சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதை தாயிடம் சிறுமி தற்போது கூறிய நிலையில், தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் அருண் மற்றும் பக்கத்துக்கு வீட்டுகாரர் விக்கி ஆகியோரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.