காதல் தோல்வி குற்றமில்லை.. திருமணம் செய்யாமல் ஏமாற்றுவது மோசடி கிடையாது - உயர்நீதிமன்றம்
- சட்டம் அதை மோசடி என்று கூறவில்லை.
- ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள சப் இன்ஸ்பெக்டர் மறுத்துள்ளார்.
இதனால் சப்-இன்ஸ்பெக்டர் திருமண வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த 2021 இல் போலீசில் புகார் அளித்தார். கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை மருந்துகளை அவர் தனக்கு கொடுத்ததாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவிதிர்ந்தார்.
இந்த வழக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "அவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு முதல் உறவிலிருந்தனர். இருவரும் தங்கள் சம்மதத்துடன் ஒரு உறவில் நுழைந்தனர். ஆனால் இந்த உறவு திருமணமாக மாறவில்லை. அது தனிப்பட்ட குறைகளால் இருக்கலாம், ஆனால் காதல் தோல்வி ஒரு குற்றமல்ல. தனிப்பட்ட ஏமாற்றத்தை சட்டம் மோசடி என்று வரையறுக்கவில்லை என்று கூறி பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும், நமது சட்ட அமைப்பு மற்றும் அதை வடிவமைக்கும் சமூக உணர்வு இரண்டிலும், உடல் உறவு மற்றும் திருமண பந்தங்களை பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு ஆணாதிக்க சமூகத்தில், திருமணம் என்பது வெறும் சம்பிரதாயமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பெண்ணின் பாலியல் தேர்வு ஒரு ஆண் தரும் திருமண உறுதிப்பாட்டுடன் பிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உருவாக்குகிறது. திருமணம் என்பது ஒரு இலக்கு அல்ல. உறவையும் திருமணத்தையும் கலப்பது என்பது மனித உறவுகளைப் பழமையான எதிர்பார்ப்புகளில் சிறை வைப்பதாகும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.