இந்தியா

கால்களில் மாட்டிய சங்கிலி.. கைகளில் பூட்டிய விலங்கு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் வேதனை

Published On 2025-02-16 15:08 IST   |   Update On 2025-02-16 15:08:00 IST
  • கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
  • இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது. அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

அவர்களை கைவிலங்கிட்டு அழைத்து வந்ததை இந்திய எதிர்க்கட்சிகள் கண்டித்தன. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி இந்திய சட்டவிரோத குடியேறிகளை திரும்ப பெற முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துவிட்டு வந்தார்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இவர்களும் கால்களில் சங்கிலி இடப்பட்டு, கைவிலங்கு பூட்டி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள குராலா கலான் கிராமத்தைச் தல்ஜித் சிங் என்பவர் நாடுகடத்தப்பட்ட 116 பேரில் ஒருவர். தங்களை சங்கிலியிட்டு அழைத்துவந்ததை இவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம் அனுப்பி வைப்பதாக கூறி தன்னை, சட்டவிரோதமாக டாங்கி ரூட் வழியாக ஒரு முகவர் ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கிடையே, நாடுகடத்தப்பட்ட 116 பேரில், பாட்டியாலா மாவட்டத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பேரும் அடங்குவர். அவர்கள் வருவதை அறிந்து பாட்டியாலா போலீஸ் விமான நிலையத்தில் காத்திருந்தது. ஸ்ரீ குரு ராம்தாஸ் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அங்கு வைத்தே அவர்களை போலீஸ் கைது செய்தது.

 

கைது செய்யப்பட்ட இருவரும் உறவினர்கள் என்றும், சந்தீப் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு பாட்டியாலாவில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த இவர்கள், சட்டவிரோதமாக எல்லை கடந்து தப்பித்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

Tags:    

Similar News