மரங்களை வெட்டுவது மனிதர்களை கொலை செய்வதை விட மோசமானது - உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
- தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டினார்.
- இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொல்வதை விட மோசமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தாஜ் மகாலை சுற்றிய பாதுகாக்கப்பட்ட தாஜ் ட்ரேபீசியம் மண்டலத்தில் 454 மரங்களை வெட்டிய சிவசங்கர் அகர்வால் என்பவரின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு ஆணையம் (CEC) சிவசங்கர் அகர்வால் வெட்டிய ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க பரிந்துரைத்திருந்தது. இதை எதிர்த்தே அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் மனு மீதான விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், சுற்றுச்சூழல் விஷயத்தில் கருணை காட்டக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது.
அனுமதியின்றி வெட்டப்பட்ட 454 மரங்கள் வழங்கி வந்த பசுமையை மீண்டும் உருவாக்க குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறி, வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கும் CEC பரிந்துரையை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.