இந்தியா

பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும்- கருத்துக்கணிப்பில் தகவல்

Published On 2025-02-13 12:57 IST   |   Update On 2025-02-13 12:57:00 IST
  • புதிய வாக்காளர்கள் மற்றும் நீண்ட காலமாக வாக்களித்து வரும் வாக்காளர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
  • காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 20 சதவீதமாக சரிந்துள்ளது.

புதுடெல்லி:

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும் பான்மை கிடைக்கவில்லை.

இதனால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்து 9 மாதங்கள் ஆகி உள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு எப்படி உள்ளது? யாருக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது? யாருக்கு செல்வாக்கு குறைந்துள்ளது என்பது தொடர்பாக இந்தியா டுடே-சிவோட்டர் மூட் ஆப் தி நேஷன் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தின.

ஜனவரி 2-ந்தேதி முதல் கடந்த 9-ந்தேதி வரை அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதிய வாக்காளர்கள் மற்றும் நீண்ட காலமாக வாக்களித்து வரும் வாக்காளர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜ.க. கூட்டணி 343 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு மட்டும் 281 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.


அதே நேரத்தில் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு இப்போது சரிந்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 232 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது தேர்தல் நடைபெற்றால் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 78 தொகுதிகளாக குறைந்து உள்ளது.

தனிப்பட்ட முறையில் பா.ஜ.க.வின் செல்வாக்கு 3 சதவீதம் அதிகரித்து 41 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 20 சதவீதமாக சரிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியில் உள்கட்சி மோதல்கள் நீடித்து வந்த நிலையில் அடுத்தடுத்து நடந்த சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் செல்வாக்கு சரிந்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று பா.ஜ.க. கூட்டணி கூறி வந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி இதையே தெரிவித்தார். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பா.ஜ.க. கூட்டணியின் கோஷத்தை விமர்சனம் செய்து காங்கிரஸ் பிரசாரம் செய்தது. இவ்வளவு இடங்களில் பெரும்பான்மை பெற்றால் பா.ஜ.க. நாட்டின் அரசியலமைப்பை மாற்றிவிடும் என்று காங்கிரஸ் பிரசாரத்தில் ஈடுபட்டது. இதனால் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு கிடைத்தன. இதனால் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வின் செல்வாக்கு சற்று சரிந்து காணப்பட்டது.

ஆனாலும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு மராட்டியம், அரியானா மற்றும் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்துள்ள நிலையில் இந்த 3 மாநிலங்களிலுமே பா.ஜ.க. தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு அது மீண்டும் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.க.வுக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News