கைக்குழந்தையுடன் ஆபத்தான வீடியோ பதிவு செய்த பெண்
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை கண்டித்து பதிவிட்டனர்.
- எதிர்மறையான கருத்துக்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.
இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மாடியில் உயரத்தில் நின்று மற்றொரு கையால் வீடியோ பதிவு செய்வது போன்ற ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியது. வர்ஷா யதுவன்ஷி தன்வா என்ற பயனர் பதிவிட்ட இந்த வீடியோவில், நான் உலகை ஆராய்ந்து என் அன்புக்குரிய அம்மாவுடன் வைட்டமின் டி எடுத்துக்கொள்ளும் துணிச்சலான பையன் என்று தலைப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இளம்பெண் ஒரு மாடியின் விளிம்பில் அமர்ந்திருக்கிறார். அவரது மடியில் அமர்ந்திருக்கும் கைக்குழந்தையை ஒரு கையால் பிடித்துள்ளார்.
மற்றொரு கையால் வீடியோ பதிவு செய்கிறார். அந்த வீடியோவில் மாடிக்கும், கீழே உள்ள சாலைக்கும் இடையில் உள்ள குறிப்பிடத்தக்க உயரத்தை காட்டுவது போன்று காட்சி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை கண்டித்து பதிவிட்டனர். ஒரு பயனர், தயவு செய்து இதுபோன்ற ஆபத்தான வீடியோக்களை உருவாக்க வேண்டாம் என பதிவிட்டார். மற்றொரு பயனர், இந்த மாதிரியான முட்டாள் தனத்தை செய்யாதீர்கள் என பதிவிட்டார்.
இதுபோன்று பயனர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட நிலையில் அந்த பெண் மற்றொரு வீடியோவை பதிவிட்டார். அதில், தயவு செய்து வீடியோவை சரியாக பார்த்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை என்றால் எனக்கு கவலை இல்லை. எனது குழந்தையை எப்படி வளர்ப்பது என்று எனக்கு தெரியும். எதிர்மறையான கருத்துக்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.