ரிஷப் பண்ட்-ஐ காப்பாற்றிய வாலிபர் காதலியுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
- காதலை இரு வீட்டாரும் ஏற்காததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி.
- காதலி உயிரிழந்த நிலையில், ரஜத் குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷிப் பண்ட். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி டெல்லியில் இருந்து டேராடூனுக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் விபத்துக்குள்ளாகி எரியத் தொடங்கியது.
அதிகாலை நேரத்தில் கார் எரிந்து கொண்டிருப்பதை கண்ட ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு உடனடியாக காரில் சிக்கிக் கொண்டிருந்த நபரை மீட்டனர். அப்போதுதான் அது ரிஷிப் பண்ட் என அவர்களுக்கு தெரியவந்தது.
படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிய ரிஷப் பண்ட்-ஐ உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவினர். துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து மீட்டதால் ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஜத் குமார் மற்றும் அவரது நண்பர் நிஷு ஆகியோருக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில்தான் ரஜத்தின் காதல் விவகாரத்தில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. 25 வயதான ரஜத் 21 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பெற்றோர கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் வெவ்வெறு பிரிவினர் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்னதாக இருவரும் விஷம் குடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் ரஜத் காதலியை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்த்த நிலையில், காதலியின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல குறியாக இருந்தனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலி உயிரிழந்த நிலையில் ரஜத்தை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். ரஜத்தை ரிஷப் பண்ட் இன்னும் ஒரிரு நாட்களில் நேரில் சென்ற பார்க்க வாய்ப்புள்ளதாக, ரிஷப் பண்டின் தனிப்பட்ட உதவியாளரை மேற்கோள் காட்டி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நட்சத்திர கிரிக்கெட் வீரரை காப்பாற்றி அந்த பகுதியில் ஹீரோவாக வலம் வந்த ரஜத்தின் காதல் வெற்றி பெறாத நிலையில் காதலி உயிரிழந்ததை சம்பவம் அப்பகுதி மக்களுக்கு வேதளையளித்துள்ளது.