ஆட்சியை பிடித்த 3 நாட்களுக்குள் மின்தடை: டெல்லியை உ.பி.யாக மாற்ற விரும்புகிறது பாஜக- அதிஷி குற்றச்சாட்டு
- டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சியை இழந்தது.
- பாஜக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அதிஷி குற்றச்சாட்டு.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை (10 வருடங்கள்) ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சியால் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இதனால் டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், முதல்வராக இருந்த அதிஷி கடந்த 9-ந்தேதி தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் வழங்கினார்.
இந்த நிலையில ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து விலகிய 3 நாட்களுக்குள் டெல்லியில் பல்வேறு நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. டெல்லியை உ.பி.யாக மாற்ற பாஜக விரும்புகிறது என அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்த நிலையில் டெல்லி மின்தடையை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் பலமணி நேரம் மின்தடையை எதிர்கொண்டு வருகிறது. பாஜக டெல்லியை உத்தர பிரதேசம் போன்று மாற்ற விரும்புகிறது.
40-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள மக்கள் தற்போது இன்வெர்ட்டர்களை வாங்க தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி அரசின் கீழ், மின்சாரத்துறை தொடர்ந்து கவனித்து வந்த நிலையில், பாஜக வெற்றி பெற்ற 3 நாட்களிலேயே சீர்குலைந்து விட்டது.
எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது பாஜக-வுக்கு தெரியாது. உத்தர பிரதேசம் போன்று டெல்லியில் நீண்ட நேர மின்தடை சூழ்நிலையை பாஜக உருவாக்கும்.
இவ்வாறு அதிஷி தெரிவித்தார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. 8-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் அடுத்த முதல்வர் யார்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் புதிய முதல்வர் பதவி ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.