EWS: எந்த ஒடுக்குமுறையும் அனுபவிக்காமல் இட ஒதுக்கீடு.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தவறு - முன்னாள் நீதிபதி
- 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்தது.
- இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்காக கொண்டுவரப்பட்டது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு இட ஒதுக்கீட்டில் முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்தது. சமூகத்தால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல் பொருளாதாரத்தால் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டத்தைத் திருத்தம் செய்தது.
இதன் மூலம், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை அப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா, ரவீந்திர பட் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகிய 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.
5 இல் 3 நீதிபதிகள் ஆதரித்து தீர்ப்பளித்ததால் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லுபடியாகும் என்று முடிவில் தீர்ப்பானது. தற்போதுவரை இந்த இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த மறைந்த நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரின் 10ம் ஆண்டு நினைவு கூட்டத்தில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியாக சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுக்காக கொண்டுவரப்பட்டது.
உயர்வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தார்மீக ரீதியாகவும் தவறானது. இந்த இட ஒதுக்கீட்டை பெறுவோர் வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைக்கும் ஆளானது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.