விளையாடிக் கொண்டிருந்தவன் மீது ஏறி இறங்கிய கார்- அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுவன்
- சிறுவன் காலி மைதானத்தில் உட்கார்ந்தபடி தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
- ஈவு, இரக்கமின்றி காரை நிறுத்தாமல் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு நைபாடா பகுதியை சேர்ந்த சிறுவன் ராகவ்குமார் சர்மா (வயது 6). இவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் உட்கார்ந்தபடி தனியாக விளையாடிக் கொண்டிருந்தான். அவன் பின்னால் சற்று தூரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த டிரைவர் திடீரென காரை எடுத்து முன்னோக்கி இயக்கினார். முன்புறம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் மீது கார் ஏறியது. இதில் இரு சக்கரங்களுக்கும் இடையில் சிக்கி கொண்ட சிறுவனை கார் சிறிது தூரம் இழுத்து சென்றது. பின்னர் பின்சக்கரம் சிறுவன் மீது ஏறி இறங்கியது. இந்த பயங்கர விபத்தை அடுத்து கார் நிற்காமல் சென்று விட்டது.
காரில் அடிப்பட்ட சிறுவன் உருண்டு புரண்டு எழுந்தான். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் நின்ற சிறுவர்கள், அதிர்ச்சியுடன் உதவிக்காக ஓடி வந்தனர். இருப்பினும் எழுந்த சிறுவன் 'குடுகுடு' வென வீட்டுக்கு ஓடிச் சென்றான். அவனது நண்பர்கள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கார் ஏறிச் சென்றதில் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாலும் அவனுக்கு அதிகளவில் உள்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தலை, நெஞ்சு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் சிறுவன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈவு, இரக்கமின்றி காரை நிறுத்தாமல் சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
இதற்கிடைய சிறுவன் மீது கார் மோதி ஏறி, இறங்கிய சம்பவமும், உடனடியாக சிறுவன் எழுந்து வீட்டுக்கு ஓடி சென்ற காட்சிகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.