பாம்புகள் நிறைந்த காட்டில் குழந்தை பெற்றெடுத்து 'சுனாமி' என பெயரிட்ட பெண்
- மலைப்பாங்கான காட்டுக்குள் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகளிடையே நானும் இருந்தேன்.
- தஞ்சம் அடைந்த சில பெண்கள் உதவியால் காடுகளுக்குள், மிகவும் சவாலான சூழ்நிலையில், குழந்தை பெற்றெடுத்தேன்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதியை கருப்பு நாளாக மாற்றியது சுனாமி என்னும் ஆழிப்பேரலை. சுனாமி பேரலையின் கோரத்தாண்டவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் பறிபோனது. அந்த துயர சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சுனாமி பேரலையின்போது அந்தமான் தீவில் உள்ள ஹட் பே தீவை சேர்ந்த 26 வயதான நமீதா ராய் என்ற பெண் மற்றும் அவரது குடும்பத்தினரும் உயிர் தப்பி பாம்புகள் நிறைந்த காட்டில் தஞ்சம் அடைந்தனர். அப்போது நமீதா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த காட்டில் வைத்து ஒரு மகனை பெற்றார். அந்த குழந்தைக்கு 'சுனாமி ராய்' என பெயரிட்டார். கொரோனா பாதிப்பின்போது கணவர் லட்சுமிநாராயணனை இழந்த அவர் இப்போது மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளியில் தனது 2 மகன்கள் சவுரப், 'சுனாமி ராய்' உடன் வசித்து வருகிறார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு, நமீதா ராய் ஒரு நடுக்கத்துடன் அந்த நாளை நினைவுகூர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அந்த இருண்ட நாளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. நான் அப்போது கர்ப்பமாக இருந்தேன். கடலில் திடீரென ஒரு பயங்கரமான அமைதியை உணர்ந்தேன். எங்கள் கரையிலிருந்து சில மைல்கள் கடல் உள்வாங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
சில விநாடிகளுக்கு பிறகு, ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது ஹட் பே தீவை நோக்கி ஒரு பெரிய கடல் அலை வருவதை பார்த்தோம். அப்போது பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அலறியடித்து கொண்டு ஒரு மலையை நோக்கி ஓடுவதை கண்டேன். நான் பீதி அடைந்து மயக்கம் அடைந்தேன்.
சில மணி நேரங்களுக்கு பிறகு, நான் சுயநினைவு அடைந்தேன். மலைப்பாங்கான காட்டுக்குள் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகளிடையே நானும் இருந்தேன். அங்கு என் கணவரையும், மூத்த மகனையும் பார்த்த பிறகு நிம்மதி அடைந்தேன். எங்கள் தீவின் பெரும்பாலான பகுதிகள் அலைகளால் விழுங்கப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து சொத்துகளும் நீரில் மூழ்கின.
அன்று இரவு 11.49 மணியளவில் எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் டாக்டர் யாரும் இல்லை. உதவிக்காக அழுதேன். என் கணவர் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். ஆனால் எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை. பின்னர் அங்கு தஞ்சம் அடைந்த சில பெண்கள் உதவியால் காடுகளுக்குள், மிகவும் சவாலான சூழ்நிலையில், குழந்தை பெற்றெடுத்தேன்.
உணவு இல்லை. கடலுக்கு பயந்து காட்டை விட்டு வெளியே வர தைரியம் இல்லை. இதற்கிடையில் அதிக ரத்தம் வெளியேறி என் உடல்நிலை மோசம் அடைந்தது. பின்னர் அரசின் முயற்சியால் சிகிச்சைக்காக 117 கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு கப்பலில் 8 மணி நேரம் பயணம் செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்
நமீதா ராயின் மகன் 'சுனாமி ராய்' கூறுகையில், "என் அம்மா தான் நான் பார்த்ததிலேயே மிகவும் வலிமையானவர். என் தந்தை இறந்த பிறகு, அவர் எங்களை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். அவர் 'சுனாமி கிச்சன்' என்ற உணவு விடுதியை தொடங்கினார். நான் கடல் ஆய்வாளர் ஆக விரும்புகிறேன்" என்றார்.