மகாராஷ்டிராவில் 'ஜிபிஎஸ்' நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மரணம்- புனேயில் பாதிப்பு 101 ஆக உயர்வு
- 14 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்களின் 19 பேர் 50 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள்.
புனே:
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கடந்த சில நாட்களாக 'கில்லியன் பேர் சிண்ட்ரோம்' (ஜிபிஎஸ்) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக உடலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவது 'ஆட்டோ இம்யூன்' நோய் என்று அழைக்கப்படுகிறது.
இத்ததைகய நோய்களில் கில்லியன் பேர் சிணட்ரோம் ஒன்றாகும். இந்த நோய் தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கை, கால் தசைகள் வலுவிழக்கும். முதலில் மதமதப்பு போல் தொடங்கி பின்னர் தசை செயல் இழப்பு வரை செல்லக்கூடும். மேலும் உணவு, தண்ணீரை உட்கொள்வதில் சிக்கல் ஏற்படும். பேசுவதிலும் சிரமம் உருவாகும். உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட்டு மோசமான பாதிப்பாக பக்கவாதம் கூட ஏற்படும்.
புனேவில் கடந்த சில நாட்களில் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 14 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புனேவில் மேலும் சிலருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜிபிஎஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
அதில் 14 பேர் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் 19 பேர் 50 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள்.
இந்நிலையில் சோளாப்பூரில் ஜிபிஎஸ் நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இறந்துள்ளார். இந்நிலையில் புனேயில் ஜிபிஎஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்துள்ளார்.