இந்தியா

"பார்முலா இ" கார் பந்தய வழக்கு: எஃப்ஐஆரை ரத்து செய்யக்கோரிய ராம ராவ் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Published On 2024-12-31 12:37 GMT   |   Update On 2024-12-31 12:37 GMT
  • வெளிநாட்டு பணம் அனுமதி இல்லாமல் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
  • இது தொடர்பாக தெலுங்கான ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, சந்திரசேகர ராவ் மகன் ராம ராவ் அமைச்சராக இருந்தார். தற்போது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.

தெலுங்கானாவில் "பார்முலா இ" கார்பந்த பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ராம ராவ் முன்னெடுத்தார். அப்போது கார் நிறுவனத்திற்கு வெளிநாட்டு பணமாக 55 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

பின்னர், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றபின் "பார்முலா இ" கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக பணம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ராம ராவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அனுமதி பெறாமல் வெளிநாட்டு பணம் வழங்கப்பட்டது மற்றும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீசார் கடந்த 19-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராம ராவ் முதன்மையை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் குமார், ஓய்வு பெற்ற அதிகாரி பிஎல்என் ரெட்டி ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனது மீது போடப்பட்ட எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ராம ராவ் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் தன்னை போலீசார் கைது செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அப்போது நீதிமன்றம் கைது செய்ய தடைவிதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராம ராவை கைது செய்ய விதித்த தடையை மேலும் நீடித்து உத்தரவிட்டது. அத்துடன் எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்யக் கோரிய ராம ராவ் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது.

இன்றைய விசாரணையின்போது வணிக விதிகள் மற்றும் தேவையான ஒப்புதல்களைப் பின்பற்றாமல் ஃபார்முலா இ அமைப்புக்கு பணம் செலுத்தப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் வழக்கில் எந்த குற்றமும் இல்லை என்று ராம ராவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

Tags:    

Similar News