தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் கூட்டாளியின் ஜாமின் மனு தள்ளுபடி
- ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
- தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.
பெங்களூரு:
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த தங்க கடத்தல் விசாரணையை டி.ஆர்.ஐ., சி.பி.ஐ., மாநில காவல் துறை ஆகியவை தீவிரப்படுத்தி உள்ளது.
நடிகை ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்ட அவரது கூட்டாளியான தருண்ராஜு கடந்த டி.ஆர்.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் விசாரிக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கோரிய மனு பெங்களூரு பொருளாதார சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்ப கவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
டி.ஆர்.ஐ. சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் மது என். 2023 மற்றும் 2025-க்கு இடையில் ரன்யா தருணுடன் 26 முறை துபாய் பயணம் செய்தார். மார்ச் 3-ந்தேதி ரன்யாவுடன் தருண் துபாய் செல்வதற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தார். இருவரும் ஒன்றாக கிளம்பினர். பின்னர் தங்கத்தை வாங்கிக் கொண்டு திரும்பும்போது ரன்யாவிடம் கொடுத்து விட்டு தருண் ஹைதராபாத் சென்று விட்டார். தருண் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளவர். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே தருணுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபணை தெரிவித்தார்.
இதையடுத்து தருண் ராஜூவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நகர அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.