குஜராத் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் இறங்கும் மையம் ஆகிவிட்டது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு
- துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.
குஜராத் மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அமித் சவ்தா பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். குஜராத் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் இறங்கும் மையமாகியுள்ளது என்றார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:-
ரசாயனங்களுடன் சாராயம் விற்கப்படுவதால் இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் காரணமாக மாநிலம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் தாராளமாக விற்கப்படுகின்றன. தண்டனை வழங்கப்படுவதில் குறைபாடு மற்றும் சில நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளாலும் இது ஏற்படுகிறது.
குஜராத் போதைப் பொருட்கள் இறங்கும் மையமாகிவிட்டது. துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தயாரித்ததாக பல மருந்து நிறுவனங்களும் பிடிபட்டுள்ளன. குஜராத் போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது என்பதை இது காட்டுகிறது.
டீக்கடைகள் மற்றும் தெருவோர உணவு கூடங்களில் கூட போதைப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன. சமீபத்தில் சூரத்தில் ஒரு பாஜக தலைவர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
சமூக விரோத சக்திகள் பட்டியலை தயார் செய்ய குஜராத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதற்குப்பதிலாக உள்துறை நேர்மையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்ய வெண்டும் வேண்டும்.
இவ்வாறு அமித் சவ்தா விமர்சனம் செய்தார்.