பறந்த விமானத்தை பார்த்ததால் வேலைவாய்ப்பை இழந்த வாலிபர்
- வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
- இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.
பட்டதாரிகள் பலருக்கும் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதே அரிதாக உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நேர்காணலின் போது இளைஞர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில், அவர் வேலைவாய்ப்பு தேடி ஒரு நிறுவனத்தில் நேர்காணலுக்கு சென்றுள்ளார்.
அங்கு நிறுவன மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது வாலிபர் பதிலளித்து கொண்டிருந்த போது வெளியில் விமானம் பறக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தன்னை மறந்த அவர் மேலாளரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை நிறுத்திவிட்டு அருகே இருந்த கண்ணாடி சுவற்றின் வழியாக விமானம் பறப்பதை பார்த்தார். அதன் பின்னர் அந்த வாலிபர் நேர்காணல் முடிந்து வெளியே சென்ற நிலையில், அவர் வேலைக்கு தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டது.
அந்த வாலிபரின் உடல் மொழியும், தன்னம்பிக்கையும், எதிர்கால திட்டங்கள் பற்றி தெளிவின்மையும் தான் அவருக்கு வேலைவாய்ப்பு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என்று நிறுவன மேலாளர் கூறினார் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் நேர்காணலின் போது தொழில் நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என பதிவிட்டனர்.