இந்தியா

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்: இரு அவைகளும் 2 மணிவரை ஒத்திவைப்பு

Published On 2025-03-20 13:44 IST   |   Update On 2025-03-20 13:44:00 IST
  • வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் பிற்பகல் 2 மணிவரை சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.

புதுடெல்லி:

பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர்.

அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அவையில் தான் பார்த்த விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் எனக்கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மக்களவை மீண்டும் கூடியதும் வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவை கூடியதும் முதலில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News