ரூ.50 கோடிக்கு விற்கப்பட்ட அரிய வகை நாய்
- நாய்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுக்க ஏராளமானோர் திரளுகின்றனர்.
- வீடியோ இணையத்தில் வைரலாகி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் எண்ணற்ற நாய் இனங்கள் உள்ளன. ஆனால் சில அரிதான நாய் இனங்களை செல்லப்பிராணி ஆர்வலர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த நாய் வளர்ப்பாளரான சதீஷ் என்பவர் ரூ.50 கோடி கொடுத்து ஒரு நாயை வாங்கியிருப்பது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. கடபோம் ஒகாமி என்று அழைக்கப்படும் நாய் இனத்தை சேர்ந்த இந்த நாய் அமெரிக்காவில் பிறந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தரகர் ஒருவர் மூலமாக சதீசுக்கு இந்த நாய் விற்கப்பட்டது. இந்த நாய், ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் நாய்களின் கலவை ஆகும். இந்த நாய் பிறந்து 8 மாதங்களே ஆன நிலையில் 75 கிலோ கிராம் எடையும், 30 அங்குல உயரமும் கொண்டது. தினமும் 3 கிலோ பச்சை கோழியை சாப்பிடும் இந்த நாய் கம்பீரமாக திகழ்கிறது. சதீஷ் 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களை கொண்ட நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதீஷ், கடபோம் ஒகாமி உண்மையிலேயே விதிவிலக்கான நாய் என குறிப்பிடுகிறார். இந்த நாய்கள் அரிதானவை என்பதால் அவற்றை வாங்க அதிக பணம் செலவிட்டேன். மேலும் மக்கள் எப்போதும் இவற்றை பார்க்க ஆர்வமாக இருப்பதால் எனக்கு போதுமான பணம் கிடைக்கிறது என்றார். அதாவது இந்த வகை நாய்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுக்க ஏராளமானோர் திரளுகின்றனர். மேலும் இந்த அரிய நாயை சினிமாக்களில் நடிக்க வைப்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளார். இந்த நாய் ஒரு நிகழ்ச்சியில் சிகப்பு கம்பளத்தில் நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.