தாம்பத்தியத்தில் ஈடுபட ரூ.5 ஆயிரம் கேட்கும் மனைவி- போலீசில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரபரப்பு புகார்
- திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்.
- கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி பிந்துஸ்ரீ. இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஸ்ரீகாந்த், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான நாளில் இருந்தே தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், தத்தெடுத்து குழந்தையை வளர்க்கலாம் என்றும் பிந்துஸ்ரீ கூறி வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொட முயன்றாலோ, தன்னிடம் நெருங்கி வந்தாலோ தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பிந்துஸ்ரீ மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
தற்போது ஸ்ரீகாந்துடன் வாழ பிடிக்காமல் தனது பெற்றோர் வீட்டில் பிந்துஸ்ரீ வசித்து வருகிறார். இந்த நிலையில், தனது மனைவி மீது வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீகாந்த் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 'எனக்கும், பிந்துஸ்ரீக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களுக்குள் தாம்பத்யம் நடக்கவில்லை. குழந்தை பெற்றுக் கொண்டால், தனது அழகு கெட்டுப்போய் விடும், அதனால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று பிந்துஸ்ரீ கூறுகிறார். 60 வயதுக்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். அதையும் மீறி அவரிடம் நெருங்கினால், என்னை தொட்டால், உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டுகிறார். என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார், விவாகரத்து வழங்கவும் ரூ.45 லட்சம் கேட்கிறார். மனைவியின் தொல்லையால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்', என்று கூறி இருந்தார்.
அந்த புகாரை போலீசார் பெற்றுக்கொண்டார்கள். அதே நேரத்தில் குழந்தை பெறும் விவகாரம், தினமும் ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டுவது போன்ற வீடியோ காட்சிகளையும் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில், தன் மீது புகார் அளித்த கணவர் ஸ்ரீகாந்த் மீது அதே வயாலிகாவல் போலீஸ் நிலையத்தில் பிந்துஸ்ரீ நேற்று மதியம் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னிடம் வரதட்சணை கேட்டு ஸ்ரீகாந்த் மிரட்டுவதாகவும், தன்னை தாக்குவதாகவும் பிந்துஸ்ரீ கூறி இருந்தார்.
பின்னர் போலீஸ் நிலையம் முன்பு வைத்து பிந்துஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
என் மீது கணவர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை இல்லை. திருமணமான நாளில் இருந்தே என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். எனது வீட்டில் இருந்து பணம் வாங்கி வராததால், என்னை அடித்து, தாக்கி துன்புறுத்தினார். குழந்தை பெற்றுக் கொண்டால், அவரை விட்டு என்னால் செல்ல முடியாது, அவர் செய்யும் கொடுமைகளை நான் தாங்கி கொண்டு இருக்க வேண்டும் என நினைத்தார். இந்த விவகாரத்தில் நான் பேசியதை கத்தரித்தும், சித்தரித்தும் ஸ்ரீகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். அங்கு வந்தும் ஸ்ரீகாந்த் சண்டை போட்டார். அவரிடம் விவாகரத்திற்காக ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டவில்லை. திருமணத்திற்காக பெற்றோர் செலவு செய்த பணத்தை கொடுக்கும்படி தான் கேட்டு இருந்தேன். என்னை கொடுமைப்படுத்தி வந்ததால், அவருடன் சேர்ந்து குழந்தை பெற்று, அதன் வாழ்க்கையையும் வீணடிக்க கூடாது என்பதால், 60 வயதிற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னேன்', என்றார்.
கணவன், மனைவி இடையிலான பிரச்சனையில் 2 பேரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஸ்ரீகாந்த், பிந்துஸ்ரீ அளித்த புகார்களின் அடிப்படையில் வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.