கும்பமேளா பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்
- கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
- துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கியது.
அப்போது மகா கும்பமேளா நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன.
பாராளுமன்ற மக்களவையில் இன்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-
கும்பமேளாவில் உயிர் இழந்தவர்களுக்காக 2 நிமிடம் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
கும்பமேளாவில் ஏற்பட்ட இறப்புகள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை, மருந்துகள், டாக்டர்கள், உணவு, தண்ணீர், போக்குவரத்து வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கும்பமேளா பேரிடர் மேலாண்மை மற்றும் தொலைந்து போன மையத்தின் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையை மறைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இரட்டை என்ஜின் அரசாங்கத்திடம் நாங்கள் கேட்கிறோம். எந்த குற்றமும் இல்லை என்றால் புள்ளி விவரங்கள் மறைக்கப்பட்டது ஏன்? அழிக்கப்பட்டது ஏன்?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.