'ஆளுநர் பதவிக்கு ஆசைப்படும் ராஜீவ் குமார்..' கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்
- நீங்கள் உங்கள் பதவி ஆசைக்காக நாட்டை அடமானம் வைக்க வேண்டாம்
- தொடர்ந்து விமர்சனங்கள் செய்யப்பட்டு வருவதை கவனித்து வருகிறோம்.
நாளை டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மீது ஆம் ஆத்மி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பதவிக்கு ஆசைப்பட்டு ராஜீவ் குமார் பாஜகவுக்கு ஆதரவாக அவர்களின் நடத்தை விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.
"நீங்கள் உங்கள் பதவி ஆசைக்காக நாட்டை அடமானம் வைக்க வேண்டாம். பதவிக்காக நாட்டின் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டி விடாதீர்கள். உங்களுக்கு எந்த மாதிரியான பதவி காத்திருக்கிறது.. ஆளுநர் பதவியா? இல்லை ஜனாதிபதி பதவியா?" என கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் விமர்சனத்துக்குத் தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது.
அதில், "டெல்லி தேர்தலை மையமாக வைத்து மூன்று பேர் கொண்ட ஆணையம் மீது அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து விமர்சனங்கள் செய்யப்பட்டு வருவதை கவனித்து வருகிறோம்.
தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு போல கருதிக் கொண்டு இத்தகைய செயல்கள் நடந்துள்ளன. எதனோடும் சாராத ஆணையமாக செயல்படும் அமைப்பை திசைமாற்ற முயலும் செயல் இது. நாங்கள் அரசமைப்பு வரம்புக்கு உட்பட்டு செயலாற்றி வருகிறோம்" என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.