பட்ஜெட் மூலம் நடுத்தர மக்களின் கனவு நனவாகியுள்ளது - பிரதமர் மோடி
- நாட்டு மக்களின் பணம் மக்களுக்காகவே என்பது தான் பாஜக அரசின் மாடல்.
- நிறைவேற்ற முடியாத தவறான வாக்குறுதிகளை நாங்கள் எப்போதும் மக்களுக்கு வழங்குவதில்லை.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது.
அதன் முடிவில் இன்று மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, "குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 14வது முறையாக இந்த அவையில் பதிலளிக்க வாய்ப்பு தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் .
நேற்றும், இன்றும் தீர்மானத்தின் மீது பல உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பாராட்டுகளும், விமர்சனங்களும் இருந்தன.
பட்ஜெட் மூலம் நடுத்தர மக்களின் கனவு நனவாகியுள்ளது. 4 கோடி வீடுகள், 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகளை கட்டியுள்ளோம். வெற்று வாக்குறுதிகளை கொடுக்கவில்லை. மக்களுக்கு உண்மையான வளர்ச்சியை கொடுத்துள்ளோம்.
தற்போது 2025ம் ஆண்டில் இருக்கிறோம். அதாவது 21ம் நூற்றாண்டில் 25% முடிந்துவிட்டது. அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவரின் உரை எடுத்துக்கூறியுள்ளது.
காங்கிரஸ் போலியான வாக்குறுதிகளை தந்தது, நாங்கள் தான் திட்டங்களை செயல்படுத்தினோம். பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 21ஆம் நூற்றாண்டில் நமது சாதனைகளை வரலாறு தீர்மானிக்கும்.
கடந்த 50 ஆண்டுகளாக ஏழ்மையை அகற்றுவோம் என்ற முழக்கங்களை மட்டுமே நாம் கேட்டோம். தற்போது நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை பாஜக தலைமையிலான அரசு வழங்கி உள்ளது.
நிறைவேற்ற முடியாத தவறான வாக்குறுதிகளை நாங்கள் எப்போதும் மக்களுக்கு வழங்குவதில்லை. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை பாஜக நிலைமையிலான அரசு வழங்கி உள்ளது.
பாஜக தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் 12 கோடி இல்லங்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்கியுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்தார்.