நான் தினமும் வீட்டில் குளிப்பேன்.. மகா கும்பமேளா குறித்த கேள்விக்கு பரூக் அப்துல்லா பதில்
- மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- என் கடவுள் எனக்குள் இருக்கிறார் என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.
ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் நீராட பிரயாக்ராஜுக்கு வருவீர்களா என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதில் அளித்த அவர், "நான் தினமும் என் வீட்டில் குளிப்பேன்" என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், எனது வீடு மசூதியிலோ, கோவிலிலோ, குருத்வாராவிலோ இல்லை. என் கடவுள் எனக்குள் இருக்கிறார். டெல்லி தேர்தலில் என்ன நடக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல ஒரு ஜோதிடராக மாற வேண்டும். யார் வருவார்கள், யார் போவார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?" என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக கும்பமேளா குறித்து பேசிய பரூக் அப்துல்லா, "கும்பமேளா நல்ல விசயம்தான். இது கடந்த 100 ஆண்டுகளாக பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.