போக்குவரத்து விதி மீறியவருக்கு ரூ.1.61 லட்சம் அபராதம்
- ஒரு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபரின் வெவ்வேறு புகைப்படங்களை இணைத்திருந்தார்.
- மற்றொருவர், அபராத தொகை அவரது ஸ்கூட்டரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து சிக்னல்களை மீறி செல்லுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போலீசார் அபராதம் விதிப்பார்கள். ரூ.100, ரூ.200, ரூ.1,000 முதல் விதிமீறல்களுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஒரு வாகன ஓட்டிக்கு ரூ.1.61 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஷிபாம் என்ற பயனர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு செய்திருந்தார்.
அதில், ஒரு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நபரின் வெவ்வேறு புகைப்படங்களை இணைத்திருந்தார். அதனுடன் அவரது பதிவில், இந்த நபருக்கு கடந்த ஆண்டு வரை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு அபராதமாக ரூ.1.05 லட்சம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கூடுதலாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை போக்குவரத்து விதிமீறலுக்காக அவருக்கு ரூ.1.61 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு அவரது இருசக்கர வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்பட்டவில்லை? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இவரது பதிவு வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், அவர் போலீஸ் அதிகாரியின் உறவினராக இருக்கலாம் என பதிவிட்டார். மற்றொருவர், அபராத தொகை அவரது ஸ்கூட்டரின் மதிப்பை விட அதிகமாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.