USA-ல் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. காங்கிரஸ் MLA-க்கள் கைகளில் விலங்கிட்டு போராட்டம்
- இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
- தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் 3 கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று குஜராத் சட்டப்பேரவைக்கு முன்பாக ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைகளில் விலங்கிட்டுக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
அமெரிக்காவிலிருந்து விலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து மோடி அரசு மவுனம் காப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.