துப்பாக்கியால் சுட்டவர்களை துடைப்பக்கட்டையால் துரத்திய பெண்..
- எதிர் வீட்டில் இருந்த பெண் துடைப்பக்கட்டையுடன் ஓடிவந்தார்.
- குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.
துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.