காசு கொடுத்து மனைவிக்கு ரெயில்வே வேலை.. பிரிந்து சென்றதால் போட்டுக் கொடுத்த கணவன் - வெளிவந்த மோசடி
- "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.
- ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது.
ராஜஸ்தானில் மனைவி பிரிந்த விரக்தியில் கணவன் கொடுத்த தகவல் ரெயில்வே ஆட்சேர்ப்பில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த மணீஷ் மீனா என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு ரெயில்வேயில் பாயின்ஸ் - உமன் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
அதாவது, தனது மனைவிக்கு பதிலாக வேறு ஒரு நபரை தேர்வு எழுத வைத்து மோசடியாக வேலை வாங்கி தர ரெயில்வே காவலரான ராஜேந்திரா என்ற முகவருக்கு ரூ.15 கோடி கொடுத்துள்ளார். இந்த பணத்தை தனது விவசாய நிலத்தை அடைமானம் வைத்துத் திரட்டியுள்ளார்.
ஆனால் வேலைக்குச் சேர்ந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, "வேலையில்லாதவர்" என்று கூறி அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து பிரிந்து சென்றார்.
ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த மனீஷ், பணம் கொடுத்த விவகாரத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மேற்கு மத்திய ரெயில்வேயின் விஜிலென்ஸ் துறை விசாரணையைத் தொடங்கியது.
இந்த விவகாரம் இறுதியில் சிபிஐயிடம் சென்றது. இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மனீஷின் மனைவி ஆஷா உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
போலி தேர்வரை பயன்படுத்தி வேலை பெற்ற ஒரே நபர் ஆஷா மட்டுமல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரெயில்வேயில் ஒரு பெரிய ஆட்சேர்ப்பு ஊழல் நடந்துள்ளதை சிபிஐ கண்டறிந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.