பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்.. டெல்லி பாஜக வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு
- கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார்.
- அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன்
தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக - காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் முதல்வர் அதிஷியின் கல்காஜி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா நிற்கிறார். மேலும் நேற்று பாஜக 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
அதன்படி கல்காஜி தொகுதியில் பாஜக சார்பில் ரமேஷ் பிதுரி போட்டியிட உள்ளார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூட்டோடு சூடாக பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி பிரியங்கா காந்தி பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நேற்று பிரசாரதில் பேசிய ரமேஷ் பிதுரி, "பீகார் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு பிரசாத் கூறினார். அதை அவரால் செய்ய முடியவில்லை.
ஆனால் நான், ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதி சாலைகளை உருவாக்கியதைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன் எனப் பேசினார்.
பிதுரியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் எக்ஸ் தளத்தில், பிரியங்கா காந்தி குறித்த ரமேஷ் பிதுரியின் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் உண்மை முகம்.
பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சு மற்றும் சிந்தனையின் தந்தையே பிரதமர் மோடிதான். அவரே, பெண்களுக்கு எதிராக 'மாங்கல்யம்' மற்றும் 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் உபயோகிப்பார். இந்த மோசமான பேச்சுக்காக ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்பியா ஷ்ரினேட் மேலும் கூறுகையில், ரமேஷ் பிதுரி, பிரியங்கா காந்தி குறித்து கூறியிருப்பது அவரது மனநிலையையும் பாஜகவின் தன்மையையும் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பதிவிட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், இவர்தான் பாஜகவின் வேட்பாளர், அவர் பயன்படுத்தும் வார்த்தையை கேளுங்கள், இதுவே பெண்களுக்கு பாஜக கொடுக்கும் மரியாதை. இப்படிப்பட்ட தலைவர்களின் கைகளில் டெல்லி பெண்களின் மரியாதை பாதுகாப்பாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.