மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது - சபாநாயகர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றசாட்டு
- ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது.
மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என்று மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் எதற்காக கூறினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
சபாநாயகர் கூறியது குறித்து பேசிய ராகுல் காந்தி, "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சபாநாயகரிடம் என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற தகவலை கூறினார். பின்னர் தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் அவையை ஒத்திவைத்தார்.
மக்களவையில் நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை. அன்று, பிரதமர் மோடி, கும்பமேளா பற்றிப் பேசினார். நான் அதில் கூடுதல் தகவல்களை கூற விரும்பினேன். வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன், ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், சபாநாயகரைச் சந்தித்து இது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.