உலக அளவில் பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது இந்தியா- மத்திய மந்திரி தகவல்
- இந்தியாவில் 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
- இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன்சிங் பேசினார். அவர் பேசியதாவது:-
மோடி அரசு கடந்த 2014-ம் ஆண்டு ராஷ்டிரீய கோகுல் மிஷன் என்ற திட்டத்தை தொடங்கியது. அப்போது இருந்து நாட்டில் பால் உற்பத்தி 63.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில், பால் உற்பத்தி மேலும் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.
தற்போது, உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு இந்தியாதான். 23 கோடியே 90 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 5 ஆண்டுகளில், பால் உற்பத்தியை 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இந்தியாவில், 10 கோடி மக்கள் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். இந்தியாவில் ஒரு நபர் அருந்தும் பாலின் அளவு 471 கிராம் ஆகும்.
ராஷ்டிரீய கோகுல் மிஷனின் நோக்கம், உள்நாட்டு கால்நடை இனங்களை பராமரித்து, மேம்படுத்துவதுடன், பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரித்து, பால் உற்பத்தியை உயர்த்துவது ஆகும். இதன்மூலம், பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இதை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் சேவை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.