இந்தியா

பெண் டாக்டர் கொலை விவகாரத்தில் மலிவான அரசியல்: பாஜக, சிபிஐ-எம் மீது மம்தா விமர்சனம்

Published On 2024-08-14 21:37 IST   |   Update On 2024-08-14 21:37:00 IST
  • வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
  • ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துக் கல்லூரி பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இலிவான அரசியலில் ஈடுபடுவதாக மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் நிற்பதற்குப் பதிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாஜக மலிவான அரசியலில் ஈடுபடுகின்றன. வங்கதேசத்தை (பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம்) இங்கே செய்ய முடிவும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு அதிகாரத்தின் மீது பேராசை கிடையாது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

நாங்கள் என்ன செய்யவில்லை? நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்கவில்லை?. சம்பவம் குறித்து அறிந்ததும் காவல் ஆணையரிடம் பேசினேன். பெண்ணின் பெற்றோரிடம் பேசினேன். குற்றவாளி தூக்கிலிடப்படுவார் என பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இரவு முழுவதும் வழக்கை கண்காணித்து வருகிறேன். தகனம் செய்யும் வரை போலீசாருடன் தொடர்பில் இருந்தேன். போலீசார் 12 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்தனர்.

டிஎன்ஏ சோதனை, சிசிடிவி காட்சிகள், மாதிரி சோதனை என முழுமையான விசாரணை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு 12 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டார்.

எந்தவொரு விசாரணைக்கும், நீங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ஞாயிறு வரை கெடு விதித்திருந்தேன். முறையான விசாரணை இல்லாமல் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. மூத்த மற்றும் இளைய மருத்துவர்களை நான் மதிக்கிறேன். முறையான விசாரணை இல்லாமல் மக்களை கைது செய்ய முடியாது.

உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை நாங்கள் முழுமையாகப் பின்பற்றுவோம், சிபிஐக்கு நாங்கள் ஒத்துழைப்போம்.

34 பேர் ஏற்கனவே காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். மேலும் பலர் பட்டியலில் இருந்தனர். ஆனால் உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

குற்றம் சாட்டப்பட்டவரை தூக்கிலிட வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் சிபிஐ நீதி வழங்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி ஆகஸ்ட் 16-ந்தேதி பேரணி நடத்த இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News