பாட்னாவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்
- தேர்வை ரத்துசெய்து புதிய தேர்வு நடத்தவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
- ஆனால் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்ய டிசம்பர் 13-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது என தேர்வர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது. இந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 3 நாளுக்கு முன் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு பிரசாந்த் கிஷோர் 48 மணி நேரம் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், டிசம்பர் 13-ல் நடந்த தேர்வை ரத்துசெய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என்பதே எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்பவேண்டிய தேர்வை விற்பனை செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.