இந்தியா

டெல்லி குடிசைகளை விட கெஜ்ரிவால் வீட்டு கழிவறையின் விலை அதிகம் - அமித் ஷா

Published On 2025-01-12 07:30 IST   |   Update On 2025-01-12 07:30:00 IST
  • குடிசைகளில் வசிக்கும் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள், டெல்லி ஏன் உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்று
  • பாஜகவின் கேவலமான அரசியலை முழு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி,பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சமயத்தில் அரசின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் தங்கியிருந்தபோது அங்கு ரூ.3 கோடி வரை புதுப்பிப்பு பணிகளுக்கு செலவு செய்து சொகுசாக இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை பாஜக முன்னிலைப் படுத்தி பிரசாரம் செய்து வருகிறது.

கடந்த செப்டம்பரிலேயே கெஜ்ரிவால் அந்த வீட்டை விட்டு வெளியேறியபோதிலும், அது கெஜ்ரிவாலின் ஷீஷ் மகால் [சொகுசு மாளிகை] என பாஜக கூறி வருகிறது. அங்கு  தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருந்ததாகவும் பாஜக கூறியது.

இந்நிலையில் நேற்று டெல்லி ஜேஎல்என் மைதானத்தில் நடைபெற்ற 'சேரி குடியிருப்பாளர்கள்' மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியின் சேரிகளில் வசிக்கும் மக்களுக்கு அசுத்தமான நீர் வருகிறது.

குடிசைகளில் வசிக்கும் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள், டெல்லி ஏன் உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் என்று. கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார்? ஏழைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை வழங்கியுள்ளார்.

 

இது பிரதமர் மோடியின் உத்தரவாதம், குடிசையில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் நிரந்தர வீடு வழங்கப்படும். அவரது (அரவிந்த் கெஜ்ரிவால்) 'ஷீஷ் மஹாலில்' உள்ள கழிப்பறை சேரிகளை விட விலை அதிகம் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷா ஜி என்னையும், டெல்லி மக்களையும் மிகவும் அவதூறு செய்துள்ளார். இதற்கு டெல்லி மக்கள் தேர்தலில் பதிலளிப்பார்கள்.

 

அமித் ஜி குடிசைவாசிகளிடம் நிறைய பொய் சொன்னார். தேர்தலுக்கு பிறகு பாஜக இடிக்கத் திட்டமிட்டுள்ள குடிசை பகுதியில் நான் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறேன். பாஜகவின் கேவலமான அரசியலை முழு ஆதாரத்துடன் அம்பலப்படுத்துகிறேன் என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News