null
2 செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 3 மீட்டராக குறைப்பு
- ஸ்பே டெக்ஸ் திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரத்தை குறைத்து வந்தது.
- தற்போது 2 விண்கலங்களும் மீண்டும் பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது.
பெங்களூரு:
சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035-ம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக விண்வெளியில் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சியில் இந்தியாவின் விண்வெளி கழகமான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இதற்காக கடந்த டிசம்பர் 30-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் தலா 220 கிலோ எடை கொண்ட எஸ்.டி.எக்ஸ்01 (சேஸர்) மற்றும் எஸ்.டி.எக்ஸ்02 (டார்கெட்) ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் விண்ணில் ஏவப்பட்டது.
இதில் 24 ஆய்வு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன. புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் 2 செயற்கைக்கோள்களும் ஒரே சுற்று வட்டப்பாதையில் ஒன்றன்பின் ஒன்றாக இஸ்ரோ சுற்றி வரச் செய்தது.
இதையடுத்து ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரத்தை குறைத்து வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை உந்துசக்தி குறைக்கப்பட்டு, மெல்ல மெல்ல செயற்கைகோள்களுக்கு இடையிலான தூரம் மேலும் குறைக்கப்பட்டது.
2 செயற்கைக்கோள்களுக்கு இடைப்பட்ட தொலைவு 230 மீட்டர் தூரத்தில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டது.
இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, இரு விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் தூரத்தை 3 மீட்டராக குறைக்கும் சோதனை முயற்சியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது 2 விண்கலங்களும் மீண்டும் பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது. தரவுகளை ஆய்வு செய்த பிறகு 2 விண்கலங்களையும் ஒருங்கிணைக்கும் பணி நடக்கும் என்று தெரிவித்து உள்ளது. 2 செயற்கைக்கோளும் வினாடிக்கு 10 மில்லிமீட்டர் வேகத்தில் ஒன்றையொன்று நெருங்கி நகர்த்தப்பட உள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனையை ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக செய்திருக்கின்றன. அடுத்தபடியாக இந்தியா இந்த சோதனையை செய்ய இருக்கிறது.
இதன் மூலம் இஸ்ரோ புதிய மைல்கல்லை நெருங்கி இருக்கிறது.