இந்தியா

அடுப்பில் வெந்த கொண்டைக்கடலை.. படுக்கையில் பிரிந்த 2 உயிர்கள்... நள்ளிரவில் நடந்த விபரீதம்

Published On 2025-01-12 12:07 IST   |   Update On 2025-01-12 12:08:00 IST
  • உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
  • கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு வாயு.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சிறிய கவனிக்காமல் செய்த தவறால் மூச்சுத்திணறி இரு இளைஞர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் நொய்டாவின் செக்டார் 70 இல் உள்ள பாசாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் உணவு ஸ்டால் ஒன்றை நடத்தி வந்தனர், அங்கு, 'சோலே பத்தூர்' மற்றும் 'குல்சே' உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்தனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் கொண்டைக்கடலையை பாத்திரத்தில் சமைத்த அவர்கள், மறந்துபோய் அடுப்பை அணைக்காமல் தூக்கியுள்ளனர்.

கொண்டைக்கடலை அடுப்பில் தொடர்ந்து கொதித்துக்கொண்டு இருந்ததால் அறை புகையால் நிரம்பியது. வீட்டின் கதவு மூடப்பட்டதால், அறையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கார்பன் மோனாக்சைடு புகையால் மூச்சுத் திணறி அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.

சில மணி நேரம் கழித்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு விஷ வாயு. கார்கள், டிரக்குகள், அடுப்புகள், கிரில்ஸ் மற்றும் ஜெனரேட்டர்களில் எரிபொருளை எரிக்கும்போது இது வெளியேறும். காற்று புகாமல் இறுக்கமாக மூடிய இடங்களிலும் உருவாக்கலாம்.

Tags:    

Similar News