தலித் தடகள வீராங்கனை 64 பேரால் வன்கொடுமை: 13 பேர் கைது... விசாரணையில் வெளிவரும் உண்மைகள்
- மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் ஒரு தலித் தடகள வீராங்கனையாவார். மாணவி கடந்த சில நாட்களாக மிகவும் சோர்வாக காணப்பட்டார். மேலும் விளையாட்டிலும், படிப்பிலும் அவரது ஆர்வம் குறைந்தது.
இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் அவரை தனியாக அழைத்து கவுன்சிலிங் நடத்தினர். அப்போது, தனக்கு கடந்த 5 ஆண்டுகளாக நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறி கதறி அழுதார். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த மாணவியை குழந்தைகள் நல காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மாணவி கூறிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆரம்பத்தில் ஆண் நண்பர் என்னிடம் தொடர்பில் இருந்தார். பின்னர் ஆபாச காட்சிகளை ரகசியமாக படம்பிடித்து மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
இதை அறிந்த அவரது நண்பர்களும் என்னை மிரட்டி என்னை பணிய வைத்தனர். இந்த விவரம் உடற்கல்வி ஆசிரியருக்கு தெரியவர அவரும் என்னிடம் தகாத முறையில் நடந்தார்.
மேலும் 2, 3 பேர் கூட்டு சேர்ந்தும் பலாத்காரம் செய்துள்ளனர். அதேபோல் விளையாட்டு தொடர்பாக, வெளியிடங்களுக்கு செல்லும் போதும், அங்குள்ள முகாம்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டேன் என தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து இலவும் திட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் குறித்து விசாரித்த போலீசார் முதல் கட்டமாக 40 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாதிக்கப்பட்ட மாணவி தந்தையின் நண்பர்கள் உள்பட 13 பேரை உடனடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதலில் மாணவி 13 வயதாக இருந்த போது ஆண் நண்பர் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து அந்த மாணவியின் வாழ்க்கையை ஒவ்வொருவராக சீரழித்துள்ளனர்.
ஆண் நண்பர், அவருடைய நண்பர்கள், மாணவர்கள், தந்தையின் நண்பர்கள், உடற்கல்வி ஆசிரியர் என பட்டியல் நீள்கிறது.
தற்போது கைதானவர்களில் 18 வயதை எட்டாத 2 மாணவர்களும் உள்ளனர். வீட்டிற்கு அழைத்து சென்றும், சுற்றுலாவுக்கு அழைத்து சென்றும், காரிலும், விடுதிகளிலும் வைத்து 60-க்கும் மேற்பட்டோர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
பத்தனம் திட்டா மாவட்டத்தில் மட்டும் 6 போலீஸ் நிலையங்களிலும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில், மாணவியின் தந்தைக்கு நெருக்கமான நண்பர்கள் 32 பேர் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுவரை மாணவியின் வாழ்க்கையை சீரழித்த 40 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவி ஆதி திராவிடர் என்பதால் எஸ்.சி எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.