இந்தியா

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால் பலன் கிடைக்காது- கார்கே

Published On 2025-02-13 08:55 IST   |   Update On 2025-02-13 08:55:00 IST
  • அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலில் அழைப்பு வரவில்லை.
  • இறக்குமதி பொருட்கள் மீது வரி அதிகரிப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.

கலபுரகி:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலில் அழைப்பு வரவில்லை. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்று இதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன் பிறகு அவருக்கு அழைப்பு வந்தது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இது வெற்றிகரமான சந்திப்பா என்று தெரியவில்லை. தனது அமெரிக்க பயணம் மூலம் நாடு பயனடையும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மொடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களா?. அவரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி, இந்திய தொழிலாளர்களை மரியாதை குறைவான நிலையில் இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறி இருக்க வேண்டும். இந்திய தொழிலாளர்கள் சரக்கு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் குப்பை கழிவுகளை விட மோசமாக நடத்தப்பட்டனர்.

அந்த தொழிலாளர்களை பயணிகள் விமானத்தில் அனுப்புமாறு கேட்கவில்லை. அவர் இங்கிருந்து விமானத்தை அனுப்பவில்லை. இதன் மூலம் டிரம்ப், பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்பர் என்பது பொய் என தெரியவருகிறது. தனிப்பட்ட நட்பு என்பது நல்லது தான். நட்பு நாடுகளுடன் நல்லுறவை பேண இத்தகைய நட்பு மிக முக்கியம். பிரதமர் மோடி நம்பிக்கையுடன் பேசுகிறார். ஆனால் பொய் பேசும் பழக்கம் கொண்டவராக உள்ளார்.

அதனால் அமெரிக்க பயணத்தின்போது இந்தியாவுக்கு நல்ல பலன் கிடைக்காது. இறக்குமதி பொருட்கள் மீது வரி அதிகரிப்பதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது வரியை அதிகமாக விதிக்கும் நாடுகள் மீது அதிக வரி விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News