கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் கே.ஆர்.எஸ். அணை நிரம்பியது
- மழை நின்றதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
- காவிரி பாசன கழகத்தின் கீழ் உள்ள 174 ஏரிகளில் தற்போது 142 ஏரிகள்முழுமையாக நிரம்பியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் தலைகாவிரி அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது. பின்னர் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணையை வந்தடையும்.
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. பின்னர் அங்கு இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையும் நடப்பாண்டில் 2 முறை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி 124.80அடிஉயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.66 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 1780 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வாய்க்கால் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3526 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதே போல் கபினி அணையிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த அணைக்கு வினாடிக்கு 1359 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி பாசன கழகத்தின் கீழ் உள்ள 174 ஏரிகளில் தற்போது 142 ஏரிகள்முழுமையாக நிரம்பியுள்ளது. மீத முள்ள 20 ஏரிகளில் 75 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளது. ஒரு ஏரியில் 50 சதவீதமும், 3 ஏரிகளில் 25 சதவீதமும் தண்ணீர் இருப்பு உள்ளது. அணை, ஏரிகள் நிரம்பியதால் கோடை பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.